உதயநிதி ஸ்டாலினுக்கு வெகுவிரைவில் முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. அவ்வாறு அமைச்சர் பதவியை அவர் ஏற்பதற்கு முன்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு வர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக உதயநிதியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருக்கிறது. அதேநேரம் சினிமா தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. ஆகவே திரைத்துறை அவரது கண்ட்ரோலில் இப்போது உள்ளதை போன்றே பிற நாட்களிலும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நடிப்புத்துறை தன் கையைவிட்டு போனாலும் தனக்கான வலுவான அடித்தளம் அதிலிருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பட்டாளம் துணை இருக்க வேண்டும் எனவும் உதயநிதி தரப்பு நினைக்கிறது.
இதனால் தற்போது இருந்தே சிவகார்த்திகேயனை வளர்த்துவிடும் பணிகளில் அவர் இறங்கி விட்டதாக கூறுகிறார்கள். அதன் வெளிப்பாடாகவே “டான்” ட்ரைலர் வெளியீட்டு நிகச்சியில் அவரது பேச்சு அமைந்து இருப்பதாக கூறுகின்றனர். இவ்விழாவில் உதயநிதி தயாரித்து, விஜய் நடிப்பில் வெளியாகிய குருவி திரைப்படத்தை பற்றி காமெடியாகவும் பேசி இருக்கிறார்கள். இந்த பின்னணி தொடர்பாக விசாரிக்கும்போது, “விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று உதயநிதி நினைக்கிறார். இன்னும் சில தினங்களில் அமைச்சராகி ஸ்டாலின் காலத்திற்கு பின் தமிழக அரசியலில் முக்கியமான சக்தியாக உதயநிதி உருவெடுக்கும்போது விஜய் அரசியலில் வந்து நிற்பார். இந்நிலையில் அவருக்கு எதிராக விஜய் இருப்பார் என்று உதயநிதிக்கு கூறப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகையை தொடக்கத்திலேயே தடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அது உங்களுக்குதான் ஆபத்து ஆகும். திரையுலகில் அடிவாங்கினால் அரசியலுக்கு விஜய் வரமாட்டார் என்ற யோசனையும் உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, அது தவறான யோசனை. தற்போது சினிமாவில் விஜய் கோலோச்சிக் கொண்டிருப்பதால், அவரது பார்வை பெரிதாக அரசியல் பக்கம் திரும்பவில்லை. மேலும் ரஜினியைவிட அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அவர் சினிமாவில் அடிவாங்கினால் நேரடியாக வந்து நிற்பது அரசியலாகத்தான் இருக்கும் என்று கூறினர். திரைத்துறையினரை அரவணைத்து தன் பக்கத்தில் வைத்துக்கொள்வது கலைஞர் வழக்கம். அந்தந்த நேரத்தில் உச்சத்தில் உள்ள நட்சத்திரங்களுடன் கலைஞர் நட்பு பாராட்டுவது அனைவரும் அறிந்த ஒன்றே.
திமுகவுக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் உச்சநட்சத்திரங்கள் பேசிவிடக்கூடாது என்பதில் கலைஞர் கவனமாக இருந்தார். எனினும் ஸ்டாலினிடம் அந்த அணுகுமுறை இல்லை. மிஸ்கின், சீனுராமசாமி ஆகிய திரைத்துறையினர் ஸ்டாலினை சந்தித்து திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து பிரஸ் மீட் கொடுத்தனர். அந்த நேரத்தில் ஸ்டாலினை சந்திக்குமாறு நடிகர் விஜய்யிடம் உதயநிதி கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அவர் இசைவு கொடுக்கவில்லை என்ற தகவலும் உலா வந்தது. இது தான் இருவருக்கும் இடையிலான மோதல் போக்குக்கு ஆரம்பப்புள்ளி என்று கூறுகிறார்கள். இன்றைய தேதியில் விஜய்க்கு பிறகு அடுத்த தலைமுறைக்கான ஆளாக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். ஆகவே அவரையும் அவரது ரசிகர்களையும் தனக்கான ஆளாக பயன்படுத்திக்கொள்ள உதயநிதி நினைக்கிறார். அத்துடன் சினிமாத்துறையில் தன் அறிவிக்கப்படாத தளபதியாக சிவகார்த்திகேயனை கொண்டு வரும் யோசனையும் உதயநிதிக்கு உள்ளதாக கூறுகிறார்கள்.