Categories
சினிமா தமிழ் சினிமா

உதயமாகும் புதிய தயாரிப்பாளர் சங்கம்…? அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா….!!

பாரதிராஜா தலைமையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட இருப்பதாக பரவிய செய்தி பற்றி பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவரானார்.அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு, நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்கு தனி அலுவலர் ஒருவர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். இச்சூழ்நிலையில் அடுத்த தேர்தலிலாவது ஒருமனதான முடிவை எடுத்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என இயக்குனர் பாரதிதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தற்போது தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பாரதிராஜா தலைமையில், “புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், “நமது சங்கம் பல்வேறு நபர்களால் பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதனை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். திரைப்படங்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையரங்குகளில் வெளிவர, தயாரிப்பாளர்கள் நலனை காப்பதற்கு சங்கம் சரியான பாதையில் பயணிப்பதற்கு பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

அதற்காக சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம்கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம். அதற்காக நமது சங்கத்தில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்னர்தான் சில முடிவுகள் எடுக்கப்படும்.சில நாட்களாகவே பல ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிகள் பட்டியல் பற்றியும் வெளியான செய்திகளில் எத்தகைய  உண்மையும் இல்லை.எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பின்னர்தான் எடுக்கப்படும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |