இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “சிங்களக் கடற்படையினரால் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க, அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
தமிழக மீனவர்கள் அறியாமல் எல்லை தாண்டியதைத் தவிர வேறு எந்த குற்றமும் இழைக்கவில்லை. குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக பன்னாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று மகிந்த இராஜபக்சே காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படியே இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிகிறது. உதவி செய்யும் இந்தியாவையே அபராதம் விதித்து இலங்கை அவமதிப்பது கண்டிக்கத் தக்கது. ரூ.1 கோடி அபராதம் செலுத்தினால் தான் பிணை என்றால் இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலையாகவே முடியாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.