உத்தரபிரதேசத்தில் கடந்த 5 வருடங்களாக ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் தடுக்க ரோமியோஎதிர்ப்புப்படை உருவாக்கப்பட்டது. இப்படையைச் சேர்ந்தவர்கள் பொதுஇடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகியுள்ளார். புதிய அரசு பொறுப்பு ஏற்ற 100 நாட் களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான செயல் திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரோமியோ எதிர்ப்புப் படை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைக்கப்பட்ட ரோமியோ எதிர்ப்புப்படை சென்ற 2ஆம் தேதி தன் பணியைத் துவங்கியது. அனைத்து மாவட்டங்களிலுள்ள சந்தைகள், பள்ளி, கல்லூரி பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெண்கள் உள்ள பகுதியில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெண்களிடம் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தேகப்படும் அடிப்படையில் நடந்து கொள்பவர்கள் தொடரப்பட புகார் தருமாறு காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறியபோது “உ.பி.யில் ரோமியோ எதிர்ப்புப்படை உருவாக்கப்பட்ட பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள சூழலில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் பொதுயிடங்களில் ரோமியோ எதிர்ப்புப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இதன் வாயிலாக பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் தங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் செய்ய முன் வருவார்கள்”என்று கூறினார்.