ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். சமீபத்தில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளததை காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களைத் தகுதிநீக்கம் செய்வது பற்றி மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீசும் அனுப்பி உள்ளார்.
இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் கடந்தவாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. ராஜஸ்தான் சட்டசபையை கூட்டும்தேதியை அறிவிக்க முதல்வர் அசோக் கெலாட் கவர்னர் கலராஜ் மிஸ்ராவுக்கு அழுத்தம் கொடுத்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் ராஜ்ஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவந்தால் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசுக்கு எதிராக எந்தவொரு “நம்பிக்கையில்லா தீர்மானத்திலும்” அல்லது ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தின்போது நடைபெறவிருக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் வாக்களிக்குமாறு கூறி இருக்கிறது. கட்சி தலைமை எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது, அதில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரவை மீறினால் தகுதி நீக்கம் செய்ய நேரிடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.