காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவில் ஆட்டோ ஓட்டுனரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இளந்தமிழனும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான மகேஸ்வரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளந்தமிழன் மகேஸ்வரியை பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி உடையார்பாளையம் தெற்கு தெருவில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மகேஸ்வரியை தங்களுடன் வருமாறு அவரது பெற்றோர் அழைத்தனர். அதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனை அடுத்து காதல் ஜோடியை இளந்தமிழரின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.