11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.கீரனூர் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 17 வயதுடைய சக மாணவர் ஒருவர் வெளியே செல்லலாம் வா என கூறி கோகுலை அழைத்துள்ளார். அதற்கு கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவர் உனக்காக முக்கிய விருந்து காத்திருக்கிறது என கூறி கோகுலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அதன் பிறகு கோகுல் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோகுலை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் வெட்டுக்காயங்களுடன் கோகுல் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோகுலின் நண்பரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கோகுல் அந்த மாணவரை அடிக்கடி கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனை கண்டித்தும் கோகுல் தொடர்ந்து அந்த மாணவரை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவர் விருந்து இருப்பதாக கூறி அழைத்து சென்று பள்ளியின் பின்புறம் வைத்து தான் மறைத்து கொண்டு சென்ற அரிவாளால் கோகுலை சரமாரியாக வெட்டியுள்ளார். அதன்பிறகு பேனாவால் கோகுலை குத்திவிட்டு மாணவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.