தொழிலாளியை நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தச்சு தொழிலாளியான சக்திவேல்(19) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி சக்திவேல் தனது நண்பர்களான சேகர்(22), வரதராஜ்(21) ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தனியார் லேஅவுட் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் சேகர் சக்திவேலிடம் இருந்த கண்ணாடியை கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் கண்ணாடியை கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த வரதராஜும், சேகரும் இணைந்து சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வரதராஜ் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.