உத்தரபிரதேச மாநிலத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா என்பவர் ஒரு திருநங்கை இவர் அதே பகுதியை சேர்ந்த சதாப் என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறிது நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின்னர் சதாப் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வீடு எடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவை அனைத்துமே ஜோதிகாவுக்கு தெரியாது. ஒருகட்டத்தில் இந்த சம்பவம் அனைத்தும் அவருக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்த ஜோதிகா கணவருடன் தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்தார்.
அது மட்டுமில்லாமல் பணம் தொடர்பான பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. பின்னர் மனைவி ஜோதிகா இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அடித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோதிகாவை பார்க்க வந்த கணவன் அவரிடம் பத்து நிமிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அறைக்கு வெளியே வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
சிறிது நேரத்திலேயே துப்பாக்கி சத்தம் கேட்டது. கதவை திறந்து கணவன் ஓட்டம் பிடித்தார். வேலையாட்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது ஜோதிகா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலையாட்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சதாப் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.