Categories
உலக செய்திகள்

“உன்னிப்பாக கண்காணிப்போம்”…. சீன உளவு கப்பலின் தாக்கம் குறித்து…. தகவல் வெளியிட்ட ஜெய்சங்கர்….!!

சீன உளவு கப்பலால் இந்தியாவின் நலன்களில் ஏற்படும் தாக்கம் குறித்து உன்னிப்பாக கண்காணிப்போம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்ததுள்ளது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இது தொடர்பாக கவலைகளை இந்தியா தெரிவித்ததால், கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. அதனால், கடந்த 11-ஆம் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16-ஆம் தேதி வந்து சேர்ந்தது.

இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை இலங்கை அரசு விதித்திருப்பதாக தெரிகின்றது. 22ஆம் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம். இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம். இதை ஏற்கனவே எங்கள் செய்தித்தொடர்பாளர் சொல்லி இருக்கின்றார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |