இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோடு பகுதியில் தொழிலதிபரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது ஏ. சி மெஷின் சர்வீஸ் நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த அனில்குமார் இளம்பெண்ணிடம் நீ இருந்தால் தான் என் தொழிலை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். நீ என்னை விட்டுப் போகக்கூடாது. நான் உன்னை 2-வது மனைவியாக வைத்து கவனித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அதை அனில்குமார் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து திருமணத்தை நிறுத்தவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என அனில்குமார் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இது குறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளுக்கு உடனடியாக திருமணம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த அனில்குமார் இளம்பெண்ணின் திருமணம் அன்று மணமகனுக்கு தனது செல்போனில் இருந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் திருமணம் நின்றுவிட்டது. இது குறித்து குமரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான அனில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.