கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் கஸ்தூரிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுஜிதா(34) . இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறி அந்த பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனை கேட்டு அந்த பெண், தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? என்று சுஜிதாவிடம் கேட்டுள்ளார். தோஷத்துக்கு பரிகாரமாக எதை வேண்டுமானாலும் தான் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜிதா சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்த நகைகளை கேட்டுள்ளார்.
அந்த பெண் முதலில் தன்னிடம் இருந்த நகையை சுஜிதாவிடம் கொடுத்துள்ளார். அதன் பின் பூஜை, வேண்டுதல் என பல காரணங்களை கூறி கடந்த 8 மாதங்களாக இருபத்தி இரண்டரை பவுன் நகைகளை அந்த பெண்ணிடம் இருந்து சுஜிதா பெற்றுள்ளார். இந்நிலையில் பெண்ணின் நகையை அவருடைய கணவர் கேட்டுள்ளார். அப்போது சுஜிதா நகையை அபகரித்த விவரம் தெரியவந்ததுள்ளது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுஜிதா போலி மந்திரவாதி என்பது தெரிய வந்தது. புதன்கிழமை சுஜிதாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இருபத்தி இரண்டரை பவுன் நகைகளை மீட்டனர். மேலும் என்னென்ன மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.