மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் காவல்துறையினருக்கு தெரிந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் வாடிக்கையாளர் போன்று தபாவுக்கு சென்று உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். மேலும் ஓட்டல் உரிமையாளர்களாக இருந்த 2 பேரை அவர்களுக்கு தெரியாமல் காவல்துறையினர் புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த புகைப்படங்களை காவல்துறையினர் சமூக ஆர்வலருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அவர், தொழிலாளியிடம் புகைப்படங்களை காண்பித்துள்ளார்.
அந்த தொழிலாளி குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் தபா உரிமையாளர்களான ஓம்கார் கேந்திரே (21) மற்றும் அவரது சகோதரர் கைலேஷ் கேந்திரே (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் செய்த குற்றத்தை அவர்கள் ஒப்புகொண்டனர். அதாவது, சென்ற அக்டோபர் 26-ம் தேதி பிரசன்ஜீத் கோராய் (35) என்ற அந்த சமையல்காரர் படுகொலை செய்யப்பட்ட உண்மையை ஒப்புகொண்டனர். தபாவில் வேலைக்கு சேர்ந்த 8 நாட்களில் கோராய் கொல்லப்பட்டுள்ளார்.
காரணம் உணவில் அந்த சமையல்காரர் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டிருக்கிறார். இதன் காரணமாக கோபமடைந்த தபா உரிமையாளர்கள், கோராயை கொடூர கொலை செய்துள்ளனர். 2 நாட்களுக்கு பின் இரவு வேளையில் சமையல்காரரின் உடலை நீர்நிறைந்த குழியில் புதைக்க சென்ற இடத்தில் இவை அனைத்தையும் அந்த தொழிலாளி பார்த்துள்ளார். ஆகவே ஒரு மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கி குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.