வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி மையம் தொடங்க உள்ளோம். கேரள அரசுடன் இது தொடர்பாக பேசி வருகிறோம். ஓரிரு நாளில் அவர் அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
மேலும் சபரிமலை செல்வோர் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கல்லூரிகளில் வகுப்புகள் விரைவில் எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் அரங்காவலர் நியமனத்தை முறையாக செயல்படுத்த வில்லை. அது சரி செய்து முறையாக அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் 20 நாடுகளில் உள்ளது. அதை மீட்டு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சென்னையை சிங்கப்பூராக்கி உள்ளோம் என்று தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் பருவமழை காலத்தில் சென்னை மாநகர் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே? இதற்கு பதில் இல்லை. அதற்காகத்தான் வடிகால் வசதி தொடர்பான விசாரணை கமிஷன் அமைப்பேன் என்று முதல்வர் கூறினார். உப்புத் தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.