மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே இருக்கும் தனியார் குடோனுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம் மெத்தமலை தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ்(32) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடோன் வாசல் அருகே லாரியை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கண்டைனர் பெட்டி மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து இருக்கையில் அமர்ந்தபடியே காளிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடோனில் இருந்த ஊழியர்கள் மின்வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளிராஜின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.