போஸ்ட்டரால் அ.தி.மு.க கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்ற வாசகம் இருந்தது. அந்த போஸ்டரால் கட்சியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் போஸ்டரை ஒட்டிய சுரேஷ் என்பவர் மீது மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமையிலான அ.தி.மு.க கட்சியினர் தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போஸ்டரை ஒட்டியவர் அ.ம.மு.க கட்சியை சேர்ந்தவர் என்பதும், தான் செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் போஸ்டர் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.எம் சையது கான் கூறியுள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலானோர் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கையில் தேனி மாவட்டம் முழுவதுமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கட்சியின் ஒரே தலைவர் ஓ.பி.எஸ் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரோ, புகைப்படமோ இடம்பெறவில்லை. அந்த போஸ்டரால் அ.தி.மு.க கட்சியில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.