கொடிகாத்த குமரன் என்று மக்களால் போற்றப்படுபவர் திருப்பூர் குமரன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் பிறந்த இவர் குடும்பச் சூழலால், தனது படிப்பை ஆரம்ப பள்ளியோடு முடித்துக்கொண்டார். பின்னர், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்த குமரன் போதிய வருமானம் இல்லாததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். தனது இளம் வயது முதலே காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். திருப்பூரில், இயங்கி வந்த தேசப்பற்று இளைஞர் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகம் நடத்துதல், கூட்டம் போடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினார்கள். 1932ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் தொடங்கியது.
அச்சமயம், தேசபற்று இளைஞர் மன்ற உறுப்பினர்கள், திருப்பூரில் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த குமரன், 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, வந்தேமாதரம் என வீர முழக்கமிட்டு அணிவகுத்துச் சென்றபோது, காவலர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்த குமரன் உயிருக்கு போராடிய அந்த நிலையிலும் இந்திய தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப்பிடித்திருந்தார். அதன் காரணமாக அனைவராலும் கொடி காத்த குமரன் என போற்றப்பட்டார். இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு திருப்பூரில் இவருக்கு நினைவு இல்லம் அமைத்து, இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு, கௌரவப்படுத்தியது. தான் கொண்ட கொள்கையை தனது இறுதி மூச்சுவரை உறுதியோடு இருந்த தொண்டர் கொடிகாத்தகுமரன்.