நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன்.
கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. உயிரையே பலிவாங்க கூடிய நோய் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் பலரை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். அப்படி ஒரு கொடிய நோய். வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. லாக்டவுன் என்ற பெயரில் எந்தத் தொழிலும் இல்லை.
அப்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு அரசாங்கம் தான் உதவி செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த முயற்சியில் ஈடுபட முன்வரவில்லை. ஆனால் முதன் முதலில் உயிரையே பணயம் வைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக பல கோடி பேருக்கு உதவி செய்த கட்சி தான் தி.மு.க என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
நம்முடைய தோழர்கள், நம்முடைய மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழகக் கிளைக் கழக, கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் அத்தனைப் பேரும் களத்தில் நின்றார்கள். தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நின்று மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தார்கள். மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்தார்கள். உணவு கொடுத்தார்கள். இப்படி மக்களுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது தி.மு.க. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இவ்வாறு எந்தக் கட்சியும் செய்திருக்க முடியாது என்று பெருமையோடு சொல்கிறேன் என் ஸ்டாலின் தெரிவித்தார்.