வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செம்பேடு கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநில கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் திருநின்றவூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மற்றொரு கல்லூரி மாணவர்கள் குமாரை கேலி செய்துள்ளனர். அதன்பின் உயிர் பிச்சை போடுகிறோம் இங்கிருந்து தப்பித்து ஓடி விடு என கூறி அந்த மாணவர்கள் குமாரை மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் மற்றொரு கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையில் நான் வாழ விரும்பவில்லை என நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரான மனோஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். மேலும் தலைமறைவான 7 மாணவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.