பொட்டாசியம் உரம் விலை உயர்ந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு முன் 94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் 8,000 மெ. டன் டிஏபி மற்றும் 10,000 மெ. டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்யும்படியும் மத்திய அரசிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து மத்திய அரசுக்கு 24ஆம் தேதி அன்று கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ஏற்ப மத்திய அரசு 10,800 மெ. டன் ஐ.பி.எல் யூரியா உரத்தினை நியூமங்களுர் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்துடிசம்பர் மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரத்தினை கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உர நிறுவனங்கள் வழங்கிட மாவட்ட உர வழங்கல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு 08.12.2021 அன்று சரக்கு கப்பலில் 36,000 மெ. டன் பொட்டாஷ் உரம் வந்தடைந்துள்ளது. 2020-2021 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள உரத்திற்கான மானியம்
யூரியா (உள்நாட்டு தயாரிப்பு) – 45 கிலோ எடை – 1125 ரூபாய் மானியம் (ஒரு மூட்டைக்கு)
டிஏபி – 50 கிலோ எடை – 1211.55 ரூபாய் மானியம்
பொட்டாஷ் – 50 கிலோ எடை – 303.50 ரூபாய் மானியம்
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை மூட்டை ஒன்று ரூ. 1,700/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை புதியதாக வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரக்குவியலுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ. 1040/- என்கிற விற்பனை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . தற்சமயம் மாநிலத்தில் சம்பா பருவத்திற்குத் தேவையான 66,200 மெ. டன் யூரியா, 21,380 மெ. டன் டிஏபி, 16,780 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 1,34,140 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன என்றும் விவசாயிகள் இவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் (PACB) பெற்று பயனடையும்படி அரசு தெரிவித்துள்ளது.