மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்களுக்கு சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி உசேன் தனது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உசேன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு சாவி சரியில்லை எனவும், அதனை செய்து கொடுக்கும்படியும் உசைனிடம் கூறியுள்ளார்.
அப்போது வாலிபர் கொண்டு வந்தது தனது மோட்டார் சைக்கிள் தான் என்பதை அறிந்து உசேன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செங்கரடு பகுதியில் வசிக்கும் இன்ஜினியரான மோகன் என்பது தெரியவந்தது வேலை இல்லாமல் அவதிப்பட்ட மோகன் மோட்டார் சைக்கிளை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.