அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது சட்டப்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை பன்னீர்செல்வம் நாடினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை உறுதி ஆகி சிறைக்கு சென்ற பின் பழனிசாமி பன்னீர்செல்வம் இணைந்து அதிமுகவை வழிநடத்தினர்.
அத்துடன் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டிடிவி தினகரன் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை உருவாக்கியது சட்டவிரோதமானது என்றும் சசிகலா முறையிட்டார். சசிகலாவின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்குகள் சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளதாக பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது. கட்சியும், சின்னமும் தங்களிடம் இருப்பதால் சசிகலா வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என்றும் விசாரணைக்கே உகந்ததற்ற சசிகலாவின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.