திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் .
தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது. இந்த ஸ்கூட்டரை ஓட்டிவந்த, காட்டூர்நாயக்கன் கோட்டையை சேர்ந்த 37 வயதுடைய தாமரைசெல்வன் என்பதும், அவர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தொழிலை செய்துவரும் தனியார் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் தாமரைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவரிடம் இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ,அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி திருவையாறு பகுதியின் தாசில்தாராக நெடுஞ்செழியன் முன், பணத்தை எண்ணி கருவூலத்தில் ஒப்படைத்தனர். பொதுவாகவே ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் அதற்குரிய தனி வாகனத்தில் வந்து பணத்தை நிரப்புவர். இவர் ஸ்கூட்டரில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணத்தைக் கொண்டு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.