குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரியால் போதிய ஆவணங்கள் இல்லாமல் 11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் போதிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் 11 லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது.
இதை அடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் எடைமேடை பகுதியில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை திடீரென ஆய்வு செய்தபோது நெல் மூட்டைகள் ஏற்றி செல்ல போதிய ஆவணம் உள்ளதா என்று லாரி டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மாட்டிகொண்டனர்.
இதை அடுத்து அந்த அதிகாரி கூறியதாவது, நெல் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பதற்காக வருவதை தடுக்க குழு அமைத்துள்ளோம். நெல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல தேவையான விவரங்கள் அடங்கிய புதிய படிவ முறை அறிமுக படுத்தபட்டுள்ளது . இப்படிவத்தை கட்டாயம் லாரி டிரைவர்கள் வைத்திருக்க வேண்டும்.
இதனால் போதிய ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து, நெல் மூட்டைகள் அரசிடம் ஒப்படைப்போம் .இதுவரை சரியான ஆவணமில்லாத 11 லாரிகள் பிடிக்கப்பட்டு 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கல்பனா திருவாரூர் உணவு பொருள் வழங்கல் துறை சிறப்பு வருவாய் அலுவலர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.