Categories
உலக செய்திகள்

“உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய இந்தியா”…. நன்றி சொன்ன இலங்கை அதிபர்….!!!!

இலங்கை நாடாளுமன்றம் 7 நாள் இடைவெளிக்கு பின் நேற்று மீண்டுமாக கூடியது. அப்போது புதிய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நாடாளுமன்ற வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபா நாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா, நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா தசநாயகா போன்றோர் வரவேற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் இலங்கை அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட்டு ரணில் விக்ரம சிங்கே பேசினார். அதாவது அவர் பேசியதாவது  “இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். இனி வெளிநாட்டு கடன்களை சார்ந்து இருக்கக்கூடாது. கடன் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு காணவேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை எதிர்த்தது தான் நம் இன்றைய சிக்கலுக்கு காரணம். திரிகோண மலையில் எண்ணெய் வயல் வளாகத்தை இந்தியாவுடன் சேர்ந்து மேம்படுத்த திட்டமிட்டோம். எனினும் அது இந்தியாவுக்கு இலங்கையை விற்பது போல் ஆகிவிடும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதனை அனுமதித்து இருந்தால் இன்று எரிபொருளுக்காக பல நாட்கள் வரிசையில் நிற்கும் அவலநிலை நேர்ந்திருக்காது. அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறோம். கடன் மறு சீரமைப்பு திட்டம் தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.

அதனை சர்வதேச நிதியத்திடம் சமர்ப்பிப்போம். அதேபோன்று பொருளாதார மறுசீ ரமைப்பு திட்டத்தை இடைக் கால பட்ஜெட்டில் அறிவிப்போம். நாட்டை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்கவேண்டும். அதற்கு அனைத்துகட்சி அரசு அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் என்னுடன் கை கோர்க்க வேண்டும். நாட்டை வழி நடத்த அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இந்த சிக்கலான சமயத்தில் இந்தியா அளித்த உதவியை குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர்மோடி தலைமையிலான இந்திய அரசு உரிய காலத்தில் பொருளாதார உதவி வழங்கி, இலங்கைக்கு உயிர்மூச்சு அளித்தது. இதனால் இலங்கை அரசு சார்பாகவும், என் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எரிப்பொருள் தட்டுப்பாடு இந்த வருடம் இறுதிவரை நீடிக்கும். இருந்தாலும்  இப்போது பிரச்சினை குறைந்துள்ளது. மேலும் அனைவருக்கும் நியாயமான அளவுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் பேசினார்.

Categories

Tech |