கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக கிருஷ்ணன் காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் நான்கு வழி சாலையில் உருண்டோடி தடுப்பு சுவரைத் தாண்டி மறுபுற சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கிருஷ்ணன் உள்பட 5 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கார் உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.