உருமாறிய கொரோனா பாதிப்பு முடிவுகள் தாமதமாக வருவது குறித்து வைராலஜி நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்தியா வரக்கூடிய அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு பிரிட்டனில் இருந்து வந்த அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். நேரடியாக அங்கிருந்த 46 பேர் பரிசோதிக்கப்பட்டதில், முதலில் சென்னை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியானது.
அவர் கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் இருக்கக்கூடிய கொரோனா மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு மாதத்திற்கு யார் யாரெல்லாம் பிரிட்டனில் இருந்து நேரடியாக வந்தார்கள் என்கின்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டதில் 1,438 பேர் இது வரை பிரிட்டனிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் வந்தவர்கள் என தெரிய வந்தது.
இவர்கள் பரிசோதிக்கப்பட்டதில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் இருந்து நேரடியாக வந்தவர்கள் 13 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தமாக 25 பிரிட்டன் தொடர்புடைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகளும் புனேவில் இருக்க கூடிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து முடிவுகள் இன்னும் வராமல் இருக்கின்றன. முடிவுகள் காலதாமதம் ஆவதற்கு வைராலஜி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இது தொடர்பான முடிவுகள் வருவதற்கு 14 நாட்கள் ஆகும் என சொல்கின்றார்கள். எனவே அந்த முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்கள்.