தமிழ் சினிமாவில் உருவ கேலியை ஒவ்வொரு கலைஞரும் தவறாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒருவருடைய உருவத்தை கேலி செய்வதில் தமிழ் சினிமாவை மிஞ்ச யாருமே கிடையாது. தமிழ் சினிமாவில் காமெடியன்களை கலாய்ப்பதற்கு பயன்படுத்திய வார்த்தைகளை கேட்டால் ஒவ்வொரு நாளும் 1000 மன்னிப்பு கேட்டால் கூட போதாது. இப்போதைய காலகட்டத்தில் உருவ கேலி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒருவருடைய தோற்றம் எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தார்போல் கேலி செய்கின்றனர். தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பேசும் பல வசனங்களை கேட்பதற்கு மிக வருத்தமாக இருக்கும். அந்த வரிசையில் கவுண்டமணி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட நடிகர்களும் அடங்குவர். இதில் குறிப்பாக வில்லன் நடிகர்களின் வார்த்தைகளை கேட்க மிகவும் வருத்தமாக இருக்கும்.
இந்நிலையில் கவுண்டமணி படத்தில் செந்தில் பற்றி அவர் பேசிய அத்தனை வார்த்தைகளும் மனதை புண்படுத்த கூடியவைதான். ஒரு மனிதனை எப்படியெல்லாம் இழிவுபடுத்தக் கூடாதோ அப்படியெல்லாம் செந்திலை இழிவுபடுத்தி பேசுவார். இது அவராக பேசியதா, இயக்குனர் கூறியதா, இல்லையெனில் வசனகர்த்தாக்கள் எழுதியதா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலை நாய் என்று பலமுறை கூறி திட்டியிருப்பார். இதைப்பார்த்த ரசிகர்கள் கைத்தட்டி வயிறு குலுங்கச் சிரித்தனர். ஆனால் அது மனதை புண்படுத்தக் கூடிய வார்த்தை என்று யாருமே நினைக்கவில்லை. இந்த வரிசையில் சந்தானமும் ஊனமுற்றவர்களை கை ஸ்டாண்ட் என்று கூறி பலரின் விமர்சனங்களை சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய் கூட பிகில் படத்தில் குண்டமா என்று கூறி அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒருவரை கேலி செய்து பேசினால் மட்டுமே மக்களை சிரிக்க வைக்க முடியும் என்ற பைத்தியக்காரத்தனமான முறையை பின்பற்றுகின்றனர். மேலும் மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக ஆக்கபூர்வமான முறைகளை கையில் எடுப்பவர்களை விட அவர்களை புண்படுத்தி சிரிக்க வைப்பவர்கள் தான் அதிகம். இதனால்தான் தொகுப்பாளர் கிரிஸ் ராக் வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்ததற்காக அடி வாங்கினார். ஒருவரை கேலி செய்யாமல் மற்றவர்களை புண்படுத்தாமல் சிரிக்க வைத்து பாருங்கள் உலகமே உங்களை பாராட்டும்.