புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லூர்துமேரி மற்றும் அவரது தாய் மரியலூர்தியா உடலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட தந்தை ஆரோக்கியநாதன், சகோதரன் பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் லூர்துமேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் கொசுபத்தி கொளுத்தியபோது ஏற்பட்ட தீயில் உயிரிழந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியநாதன், மனைவியை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.