பெண் போலீஸ் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த உறவினரை பார்ப்பதற்காக சத்யா தனது குடும்பத்தினருடன் திருத்தணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சத்யாவின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டான சசிகுமார் என்பவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.