மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆயப்பாடி கிராமத்தில் அப்துல் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹமத் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹுதா மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சம்சுல்ஹுதா அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வேலைக்கார பெண் விக்டோரியா கடந்த 4-ஆம் தேதி மாலை கொல்லைப்புறத்திற்கு செல்வதற்காக சந்து வழியாக சென்றுள்ளார்.
அப்போது அங்கு கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சம்சுல்ஹுதா சகோதரருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் அங்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்தது. இதையடுத்து பீரோவை சென்று ஆய்வு செய்தார். அப்போது ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.