பட்டப் பகலில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் ரோடு பகுதியில் சிலம்பரசன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்கள் நேற்று காலை கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 7,500 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிலம்பரசன் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.