பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையில் கவுசல்யா கடத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த கார்த்திக் மற்றும் கவுசல்யா ஆகிய 2 பேரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து சிவகங்கை காவல்துறையினர் காதல் ஜோடிகளை அழைத்து செல்ல முயன்றனர்.இதற்கு கார்த்திக்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன் பிறகு கவுசல்யா மட்டும் சிவகங்கை காவல்துறையினருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.