உறவு முறை மாறி நடந்த காதல் திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு இசக்கி முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். இது வீட்டிற்கு தெரிய வர இருவரையும் திட்டியுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள ரஹ்மத் நகரில் வசித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளிராஜை இருவர் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இசக்கிராஜ் மற்றும் அவரது மகன்கள் இருவர் சேர்ந்து காளிராஜ்ஜை கொலை செய்தது தெரியவந்தது. இவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உறவினர்கள் மேகலாவை பாதுகாப்புக்காக பாளையங்கோட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் வைத்திருந்தனர். அங்கு மன விரக்தி அடைந்த, மேகலா தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.