17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை மகளிர் கால் பந்து போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக நடக்கிறது. இப்போட்டி அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை புவனேஸ்வர், கோவா, நவி மும்பை போன்ற 3 இடங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இந்திய அணியானது “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, மொராகோ, பிரேசில் போன்ற நாடுகள் அந்த பிரிவில் இருக்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிவேதாதாஸ் இடம்பெற்றுள்ளார். உதவி பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக 30 வயதான நிவேதா தாஸ் கூறியிருப்பதாவது “நான் காஞ்சீபுரம் அரசு பள்ளியில் பயின்றபோது கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடியுள்ளேன்.
தென்மண்டல போட்டியில் தமிழக அணிக்காக ஆடி தங்கம் வென்று இருக்கிறேன். கால்பந்து ஆடிக்கொண்டிருக்கும் போதே நான் பயிற்சியாளருக்கான படிப்பையும் முடித்தேன். உடற்கல்வி ஆசிரியர் தன லட்சுமி எனக்கு சரியான பாதையை காட்டினார். இதன் காரணமாக நான் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தேன். சென்ற வருடம் 17 வயதுக்கு உட்பட்ட இந்திய அணிக்காக பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டேன். 17 வயதுக்கு உட்பட்ட உலககோப்பை போட்டிக்கான இந்திய மகளிர் அணிக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் வாயிலாக என் கனவு நனவானது” என்று நிவேதாதாஸ் கூறியுள்ளார்.