அமெரிக்காவில் வைத்து போயிங் மற்றும் ரேதியான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சில முக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
அதாவது அவர் வாஷிங்டன் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ரேதியான் ஆகியவற்றின் உயரதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது இந்தியாவில் அமலிலுள்ள கொள்கைகளை வைத்து “உலகத்துக்காக தயாரிப்போம்” என்ற திட்டத்தை நோக்கி நடைபோடுவதற்காக மேல் குறிப்பிட்டுள்ள 2 நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.