பாபர் ஒரு “உலகத் தரம் வாய்ந்த வீரர்”, அவரின் ஆட்டத்தை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஷதாப் கான் அறிவுறுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இறுதியாக சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றது, நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் 2 தோல்விகளை பெற்றுள்ளது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் ஆட்டம் அணிக்கு மற்றொரு பெரிய கவலையாக உள்ளது.
தற்போதைய டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் இதுவரை வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி விட்டார். அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் 0, 4 மற்றும் 4 என மட்டுமே ரன்களை எடுத்துள்ளார். இவரது ஆட்டம் குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கான் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். பாபர் ஒரு “உலகத் தரம் வாய்ந்த வீரர்”. பாபரின் ஆட்டத்தை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஷதாப் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து ஷதாப் கான் கூறியதாவது, “பாபர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், அதில் சந்தேகமில்லை, ஆனால் அவரும் ஒரு மனிதர் தான். சில நேரங்களில், அவர் தவறுகள் செய்கிறார், ஆனால் அவர் எங்களுடைய கேப்டன், அவர் எங்கள் சிறந்த கேப்டன். அவர் எங்களை ஆதரித்தார், எனவே நாங்கள் இப்போது அவருக்கு ஆதரவாக இருக்கிறோம்.
“வெறும் மூன்று ஆட்டங்களை வைத்து, அவரது ஃபார்மைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், அவர் பார்முக்கு திரும்புவதற்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் தான் தேவை. எனவே, அடுத்த ஆட்டத்தில் பாபர் எங்களுக்காக ரன்களை அடிப்பார் என்று நம்புகிறேன். அடுத்த ஆட்டம் மிகப்பெரியது, எனவே அவர் அணிக்காக ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன், ”என்று கூறினார்.