திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உண்மையான அரசியலைச் சொல்லி மக்களை அணி திரட்டும் போது உணர்ச்சி வயப்பட மாட்டான். சாதி வெறியும், மத வெறியும் அவனுக்கு இளமையிலேயே குருதி ஓட்டத்தில் இருப்பதனால் அதை அறுவடை செய்து கொள்ள விரும்புகிறார். அந்த உணர்வை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.
மக்களிடத்தில் இயல்பாக இருக்கின்ற சமூக கட்டமைப்பில் மேலோங்கி இருக்கக்கூடிய அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்டு வருகிற சாதி மத உணர்ச்சியை தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்கின்ற ஒரு தொலைநோக்கு திட்டம் சங்பரிவர்களுக்கு இருக்கிறது.
உலகத்தில் அனைத்து நாடுகளும் மதம் சார்ந்து இருக்கும்போது ஏன் இந்தியா மட்டும் மதம் சார்ந்து இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்விகளை 1920-இல் இருந்து தலைவர்கள் எழுப்புகிறார்கள். அனைத்து இந்திய இந்துத்துவ அல்லது பார்ப்பனிய அல்லது சனாதன சக்திகள் இந்தக் கேள்வியை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு இருந்த ஜனநாயக சக்திகளாக விளங்கிய பண்டிட் ஜவஹர்லால் நேரு, காந்தியடிகள், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தேசிய அளவிலேயே அந்த சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக இந்தியாவாக கட்டமைப்பதிலேயே உறுதியாக இருந்தார்கள். இல்லையென்றால் இது சனாதன இந்தியாவாகவே நிலைபெற்றிருக்கும் என தெரிவித்தார்.