உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலுள்ள மக்கள் சுற்றுலா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. இதனுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்வதற்கு விசாவும் தேவை. இந்நிலையில் ஒரு நாட்டிலிருந்து விசா இல்லாமல் ஒரு சுற்றுலா பயணியால் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கணக்கில் கொண்டு உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தர வரிசை பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது. ஏனெனில் ஜப்பான் நாட்டில் இருந்து விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இதனையடுத்து சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாட்டிலிருந்து விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணம் செல்லலாம் என்பதால், 2 நாடுகளும் 2-வது இடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து ரஷ்யா 50-வது இடத்திலும், சீனா 69-வது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்தியாவில் இருந்து 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதால் 89-வது இடத்தில் இருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலில் 112-வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்த நாட்டில் இருந்து விசா இல்லாமல் 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.