கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார். இதனை முன்னிட்டு அவரது 3 நாள் பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து பேசவுள்ளேன். இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும்.
அதன்பின், பாலியில் நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருக்கிறேன். மேலும் ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, “கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 50 % புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது. எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம். பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. உக்ரைனை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2-ஆம் உலகப்போருக்கு பின் தலைவர்கள் அமைதிப்பாதைக்கு திரும்ப தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் ஏழைக் குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்வே அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கின்றது. எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது. மேலும் எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.