உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய போது, பனஸ்கந்தாவில் உள்ள புதிய பால் பண்ணை மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றது. இந்தபகுதி, கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதுடன், இந்தியாவுக்கும் உத்வேகமளிக்கிறது. மேலும் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம், பாலை நம்பியே உள்ளது. இந்தியா, ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தி செய்கிறது. கோதுமை மற்றும் அரிசி கூட, இந்த அளவை எட்டவில்லை.பால்பண்ணைத் துறையின் மிகப்பெரிய பயனாளியர் சிறு விவசாயிகள் தான்.
‘மக்களுக்கு செலவழிக்கப்படும் ஒரு ரூபாயில், 15பைசா மட்டுமே பயனாளியரை சென்றடைகிறது’ என, நமது முன்னாள் பிரதமர் ஒருவர் கூறியுள்ளார். குஜராத்தின் ஜாம் நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைக்க, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனையடுத்து, ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகின் முதல் சர்வதேச மையத்தை அமைக்க, பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.இதில், இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரிஷியசின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் போன்ற பலர் பங்கேற்றனர்.