உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. இங்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இங்குள்ள முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டதாகும். இந்த முருகன் சிலையை தரிசனம் செய்வதற்காக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் பத்துமலையில் இருக்கும் முருகன் சிலை 140 அடி உயரம் கொண்டதாகும். ஆனால் தற்போது திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை தற்போது வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது, 146 அடி உயரமுடைய முருகனின் உருவச் சிலையில் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்தது. தற்போது மேல்பூச்சு, ஆடை, ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் முடிந்து, வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்தன. இந்நிலையில் உலகிலேயே மிக உயரமான இந்த முருகன் சிலையை பக்தர்கள் தரிசிப்பதற்காக நவீன லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 3 ஆண்டுகளாக இந்த திருப்பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததால் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.