உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்து மலை அடிவாரத்தில் உலகத்திலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த முருகன் சிலை வடிவமைக்கும் பணி கடந்த 2016-ஆம் வருடம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்களாக ஆகி முடிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கு முன்னர் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாக இருந்தது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள கோவிலை வடிவமைத்த ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் முத்துமலை முருகன் சிலையை வடிவமைத்துள்ளார்.
இப்போது மலேசியாவில் உள்ள முருகன் கோவில் சிலையை விட சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெயர் பெற்றுள்ளது. ஆத்தூர் தொழிலதிபரும், முருகபக்தருமான முத்து நடராஜன் என்பவர் மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அதே போன்று மிக உயரமான முருகன் சிலையை சேலம் மாவட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் புத்திர கவுண்டன் பாளையத்தில் தனது சொந்த நிலத்தில் அதிக செலவில் இந்தக் கோவிலை கட்ட திருப்பணியை ஆரம்பித்தார். முத்து நடராஜனை தொடர்ந்து முருகன் கோவிலை கட்டி முடித்து இருக்கிறார் அவருடைய மகன் ஸ்ரீதர். இதையடுத்து திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த முருகன் சிலையின் கையில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டு பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சிலையை உருவாக்கக்கப்பட்டுள்ளன.
இந்த அபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த சில தினங்களாகவே யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதன்பின் 9:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை, 9.30மணிக்கு கடகங்கள் புறப்பாடும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உலகிலே மிகப்பெரிய தமிழ் கடவுள் முருகன் மற்றும் விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் 10:30 மணி அளவில் நடந்தது.
இதையடுத்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அதை கலசத்தின் மீது ஊற்றினார்கள். இந்த கும்பாபிஷேகத்தின் போது முருகப்பெருமானின் கீரிடத்தின் மீது ஹெலிகாப்டர் மூலமாக ரோஜா மலர்கள் தூவப்பட்டு, பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் வந்து முருகப் பெருமானை வழிபட்டு சென்றனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், ஸ்ரீ சத்திய ஞான மஹாதேவ தேசிய பரமாசார்ய சாமிகள், வேலூர் ரத்தினகிரி சாமிகள், சிலுவை ஆதீனம், குமரகுரு சாமிகள் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடைபெற்றது. முத்துமலை முருகன் அறக்கட்டளை சார்பாக கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கொடுக்கப்பட்டது.