உலகிலேயே முதன் முதலாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை கியூபா அரசு தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசியானது பெரியவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேலான சிறுவர்களுக்கும் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் உலகிலேயே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முதன் முதலாக கியூபா தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் மருத்துவ ஆராய்ச்சிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கியூபா தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை துவக்கியுள்ளனர்.
அதிலும் கியூபாவிலுள்ள சியன்பியூகோஸ் பகுதியில் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா போன்ற நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில் கியூபா தான் முதன்முதலாக இந்த பணியை தொடங்கியுள்ளது. ஆனால் கியூபாவில் போடப்பட்ட குழந்தைகள் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர், நவம்பரில் கியூபாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து சிறுவர்களும் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று கியூபா அரசு அறிவித்துள்ளது.