உலகின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு 2022ஆம் வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் பிரபல மருத்துவ வார இதழான தி பிஎம்ஜெ டுடேயில் கொரோனா தடுப்பு ஊசி குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உலகம் முழுவதும் 370 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவது எந்த அளவுக்கு கடினமோ, அதே அளவுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதும் உலக நாடுகளுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் எளிதாக கிடைக்கும் என்றும், வளந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உறுதியாக கிடைக்கும் என கூற முடியாது என்றும் தி பிஎம்ஜெ டுடேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும், தடுப்பூசியை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால் மட்டுமே எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.