உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலக அளவில் ஏப்ரல் 11 முதல் 17-ந் தேதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ஒரு வார காலத்தில் 55 லட்சத்து 90 ஆயிரம் பேரை கொரோனா பாதித்துள்ளதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 17.24 சதவீதம் வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால், ஒரு வார காலத்தில் 18 ஆயிரத்து 215 பேர் பலியாகி இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவு எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் எல்லா பிராந்தியங்களிலும் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. பல நாடுகள் தங்கள் கொரோனா பரிசோதனை உத்திகளை படிப்படியாக மாற்றுவதால், இந்த போக்கு எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.