இந்தியா முழுவதும் இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 1,50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அளித்துள்ள தகவலோடு ஒப்பிடும் போது 10 மடங்கு அதிகம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலக சுகாதர நிறுவனத்தின் இந்த அறிக்கையை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, நமது நாட்டில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலில் இருக்கிறது. எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிகை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா மரணங்கள் ஏற்படத் தொடங்கியபோது, அது பற்றிய வரையறை நம்மிடம் இருக்கவில்லை. அப்போது உலக சுகாதார நிறுவனத்திடமும் அத்தகைய வரையறை இருக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி குறித்த தரவுகளையும் திட்டமிட்ட ரீதியில் நாம் சேகரித்து வருகின்றோம். இவ்வாறு 130 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் உள்ள தரவுகள் நம்பகத்தன்மை மிகுந்தவை.அதனால், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை பொருட்படுத்த வேண்டியதில்லை என கூறியுள்ளார்.