ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம், சமூக வலைதளங்கள் வாயிலாக ரஷ்யாவை சேர்ந்த “சைபர் வீரர்கள்” எனப்படும் இணையவெளி கும்பல் ஒன்று வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சைபர் வீரர்கள் சமூக ஊடக தளங்களை குறிவைத்து வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தின் மூலம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலருக்கு ஊதியம் கொடுத்து பணிபுரிய செய்து வருகின்றனர். இவர்கள் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் சேர்க்கவும் டெலிகிராம் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட கும்பல் உக்ரைன் மீதான படையெடுப்பை சட்டபூர்வமாக்க சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக், டெலிகிராம் உள்ளிட்ட 8 சமூக ஊடக தளங்களில் இவர்களுடைய செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பார்வையாளர்களை குறிவைத்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.