ஐ.நா. பொதுச் செயலாளரான அண்டோனியோ குட்ரெஸ் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து பெரும்பாலான மக்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறுவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேர் திடீரென நடுவானில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் குலாம் ஐசக்சாய், ஐ.நா. பாதுகாப்பு அவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் “லட்சக்கணக்கான மக்கள் தலிபான்களால் சுதந்திரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளுக்கு பெண்கள் யாரும் செல்ல முடியாத நிலையும் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஐ.நா.வின் பொது செயலாளரான அண்டோனியோ குட்ரெஸ் ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மிகவும் கொடுமையான ஒன்றாக உள்ளது. எனவே தலிபான்கள் மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளும் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உயிர்களை பாதுகாப்பதற்கும் நிதானத்தை கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.