ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி ஜனவரி 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்தது.
அதனை தொடர்ந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி ஜனவரி 11-ஆம் தேதி இரண்டாவது பரிசோதனையை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா வடகொரியாவின் 5 அதிகாரிகள் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் வடகொரியா ரயிலில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளது. அந்த ஏவுகணை சோதனையானது 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது ஏவுகணை பரிசோதனை ஆகும்.
மேலும் அந்த இரண்டு ஏவுகணைகளும் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. வடகொரியா தொடர்ந்து ஒலியின் வேகத்தை போல் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட 7 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த சூழலில் ஐ.நா. நிபுணர்கள் குழு வடகொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது உலக நாடுகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.